நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் நேற்று தொடங்கிய நிலையில், மக்கள் விரும்பாமல் புறக்கணிக்கின்ற திட்டங்களை சாதனைகள் என்று புகழப்பட்டுள்ளது என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா விமர்சித்துள்ளார்.
நேற்று காலை 11 மணியளவில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்கட்டம் மக்களவை, மாநிலங்களவையின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையோடு தொடங்கியது. அந்த உரையில் அவர், குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது, காஷ்மீரின் சிறப்புத் தகுதியை நீக்கியது உள்ளிட்டவற்றை புகழ்ந்து பேசினார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, "குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேறியதன் மூலம் காந்தியடிகளின் கனவு நிறைவேறியது என்று குடியரசுத் தலைவர் கூறியதை ஏற்க முடியாது. காந்தியடிகள் மதத்தின் அடிப்படையில் ஒருவரை நாட்டை விட்டு வெளியேற்றவோ, அனுமதிக்கவோ ஒருபோதும் கூறவில்லை. ஆனால், தற்போதைய குடியுரிமை திருத்தச் சட்டம் சிறுபான்மையினருக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கும் எதிராக அமைந்துள்ளது.
கடந்த 2018-2019ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக இருந்த நிலையில், இந்த பட்ஜெட் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த பட்ஜெட் கார்ப்பரேட்களுக்கு நல்லது செய்யும் வண்ணமாகவும் மக்களை வதைக்கும் விதமாகவும் இருந்தது. பட்ஜெட்டின் தன்மைக்கேற்ப திமுக எதிர்வினையாற்றும்.
பாஜக அசுரபலத்துடன் ஆட்சியில் அமர்ந்துள்ளதால் மக்கள் விரோத திட்டங்களைச் செயல்படுத்திவருகின்றது. மக்கள் அடுத்த தேர்தலில் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். சிஏஏ உள்ளிட்ட விஷயங்களுக்கு எதிராக திமுக ஜனநாயக ரீதியாக மக்களவையில் குரல் எழுப்பும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ‘மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு மோடியும் எங்க டாடியும் தான் காரணம்’ - உதயநிதி