எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக 2017இல் வாக்களித்த ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை சட்டப்பேரவைக்குள் நுழைவதை தடுக்கக் கோரி திமுக உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், மணிப்பூர் காங்கிரஸ் எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய உச்ச நீதிமன்றம், மணிப்பூர் உயர் நிதீமன்றம் உத்தரவிட்ட தீர்ப்புகளை மேற்கொள்காட்டியுள்ள திமுக, ஓ. பன்னீர் செல்வம், கே. பாண்டியராஜன் ஆகியோரை அமைச்சரவையிலிருந்து நீக்கவும் கோரியுள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மணிப்பூர் எம்எல்ஏ சியாம்குமார் சிங் பாஜகவுக்கு சென்றதால் அவரை அமைச்சரவையில் இருந்து உச்ச நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டது. பாஜகவுக்கு தாவிய மணிப்பூர் எம்எல்ஏக்களின் விவவகாரத்தில் அம்மாநில சபாநாயகரின் மெளனத்தைக் குறிப்பிட்டு, சபாநாயகரின் மேலதிக உத்தரவு வரும்வரை அவர்களைச் சட்டப்பேரவைக்குள் நுழைய தடைவிதித்து உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டன.
இந்த உத்தரவை மேற்கோள்காட்டிய திமுக, தமிழ்நாடு அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும், சபாநாயகர் நடவடிக்கை எடுக்காததால் அந்த எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை அலுவலகத்தில் நுழைய அனுமதிக்கக் கூடாது எனக் கோரியுள்ளது. இந்த மனு மீதான விசாரணை ஜூன் 11ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.