நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ. ராசா இன்று மக்களவையில் தமிழ்நாடு அரசு அறிவித்து பின் ரத்து செய்த 5, 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து பேசினார். அப்போது, "தமிழ்நாடு அரசு இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்தில் இல்லாமல் இடையில் 5,8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. இந்தத் தேர்வானது விளிம்பு நிலையிலுள்ள குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதி.
மேலும், இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக இந்தத் தேர்வு நடத்தப்பட்டால் முதல் தலைமுறையாக கல்வி பயில்வோர்கள், பெண் குழந்தைகள், பட்டியலினத்தவர்கள், பழங்குடியின மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆகியோர்களின் கல்வி பாதிக்கப்படும். இந்தத்தேர்வு இடைநிற்றலை அதிகப்படுத்தும்.
எனவே, இந்தத் தேர்வை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தும் முன் அதனை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்" என்றார். இவர் பேசி முடித்த சில நொடிகளிலேயே தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 5,8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்துசெய்யப்படும் என அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கல்லூரி மாணவர்களிடையே மோதல்: துப்பாக்கியுடன் வலம் வந்த மாணவர்!