கர்நாடகாவின் முன்னாள் நீர்பாசனத் துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான டி.கே. சிவக்குமார் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகக் கூறி அமலாக்கத் துறை நேற்று அவரை கைது செய்தது.
இதைத் தொடர்ந்து இன்று அம்மாநில காங்கிரஸ் கட்சி, மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தது. அதன் ஒரு பகுதியாக சிவக்குமாரின் சொந்த ஊரான ராமாநகர், கனகப்புரா உள்ளிட்ட பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் சிலர் அரசுப் பேருந்து எரிப்பு, கல்வீச்சு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர்.
பெங்களூரு முதல் மைசூருவரை போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளதால் அப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக போராட்டக்காரர்களை காவல் துறையினர் ஆங்காங்கே தடுத்துவருகின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவிவருவதால், சட்ட ஒழுங்கை காக்கவும், பாதுகாப்பை வலுப்படுத்தவும் கூடுதலாக காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.