புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வீடு இல்லாதவர்கள், சாலையோரம் வசிப்பவர்கள் ஆகியோருக்கு உணவு வழங்குவதற்காக தன்னார்வலர்களுக்கு அரசு சார்பில் அனுமதி சீட்டு வழங்கப்பட்டன.
இந்நிலையில், வியாபாரிகள், காவல்துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில், வியாபாரிகளுக்கு இ-பாஸ் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டன.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அருண் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "புதுச்சேரியில் தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி சீட்டு ரத்து செய்யப்படுகிறது. அவ்வாறு உதவி அளிக்க விரும்புவோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அரசு மூலம் அந்த உதவியை வழங்க முன்வரலாம்.
இதுவரை தன்னார்வ அமைப்பினர் வழங்கிவந்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பொதுமக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான மருந்து, மளிகை, காய்கறி, விவசாய பொருட்கள் ஆகியவற்றை வாகனங்களில் ஏற்றிச் செல்ல இ-பாஸ் வழங்கப்பட உள்ளது.
இதற்காக வாட்ஸ்-ஆப் மூலமும் விண்ணப்பித்து இந்த பாஸ் பெறலாம். புதுச்சேரியில் 4 ஆயிரத்து 307 வெளிமாநிலத்தவர் உள்ளனர். இங்கு பணிபுரிந்து வந்தவர்கள் தனியாக விடுதியில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு அந்த அந்த நிறுவனம் உணவு வழங்கி வருகிறது. அவர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகின்றனர்.
மேலும், ஊரடங்கு உத்தரவை மீறியதாக புதுச்சேரியில் 418 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அரசின் உத்தரவுகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:மாற்றுத்திறனாளி மாணவர்களின் ஆசையை நிறைவேற்றிய புதுச்சேரி ஆட்சியர்!