ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் பகுதியில் மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியின் சாதனை விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜோத்பூர் எம் பி ஷெகாவத் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, சாகிராம் புனியா என்ற விவசாயி அமைச்சருக்கும், எம்பிக்கும் முன்பு மூட்டை ஒன்றினை வைத்தார். தொடர்ந்து, மூட்டையில் என்ன உள்ளது என அமைச்சர் கஜேந்திர சிங் கேட்டதையடுத்து, மூட்டையை திறக்க அவர் முற்பட்டார். ஆனால், அவரை அங்கிருந்தோர் தடுக்க முற்பட்டனர்.
இதையடுத்து அமைச்சருக்கு பதிலளித்த புனியா, மூட்டையில் விவசாயப் பகுதிகளை சேதப்படுத்தி வரும் வெட்டுக்கிளிகள் உள்ளதாகவும், வெட்டுக்கிளிகளால் தங்களது துயரங்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
அவர் கூறியதை அடுத்து, விவசாயிகள் பலரும் தங்களது துயரங்களை அமைச்சர், எம்பி இருவரிடமும் எடுத்துரைத்தனர்.
அதனைக் கேட்டறிந்த அமைச்சர், விவசாயிகளின் நிலங்களுக்குச் சென்று பார்வையிட்டார். பின்னர் வெட்டுக்கிளிகளால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து ஒரு அறிக்கையைத் தயாரித்து அனுப்புமாறு தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.
கடந்த ஒரு வருடமாக தொடர்ச்சியான வெட்டுக்கிளிகள் தாக்குதல்களால் பெரும் இழப்பை சந்தித்து வருவதாகக் கூறிய விவசாயிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக அமைச்சர் கஜேந்திர சிங் உறுதியளித்தார்.