உலகெங்கிலும் உருவாக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பூசிகள் மற்றும் அந்த தடுப்பூசிகளைத் தேர்ந்தெடுப்பதில் இந்தியாவின் திட்டம் குறித்து என்.ஐ.டி.ஐ. ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பவுல் கூறும்போது, "ஆக்ஸ்போர்டு மற்றும் வுஹானில் கரோனா தொற்று குறித்து தடுப்பூசி சோதனை நடைபெற்று வருகிறது. இதன் ஆரம்ப முடிவுகள் மகிழ்ச்சியளிக்கும்படி உள்ளது.
இதில், ஆக்ஸ்போர்டு முதல்கட்ட சோதனையிலும், வுஹான் இரண்டாம் கட்ட சோதனையிலும் உள்ளது. தடுப்பூசிகள் தேவைப்படும் அனைவருக்கும் எவ்வாறு வழங்கப்படும் என்பது குறித்து ஏற்கனவே விவாதங்கள் தொடங்கப்பட்டுள்ளன" எனக் கூறினார்.
இதற்கிடையில், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட அறிகுறியில்லாத நபர், வால்வு செய்யப்பட்ட என்-95 முகக்கவசங்கள் அணிந்துகொள்வது மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று சுகாதார அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியது.
இதையடுத்து, சிறப்பு சுகாதார அமைச்சக அலுவலர் (ஓ.எஸ்.டி) ராஜேஷ் பூஷன் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது,"ஒரு வால்வு முகக்கவசத்துடன் அதை அணிந்தவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் அவர்கள் அறிகுறியில்லாத நபராக இருந்தால், அந்த நபரிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவும் தன்மை உள்ளது" எனத் தெரிவித்தார்.