இந்தோ - திபெத் எல்லைக் காவல் படையின் கட்டுபாட்டில் உள்ள சர்தார் படேல் கோவிட்-19 சிகிச்சை மையத்தில் 10 ஆயிரம் படுக்கைகள் கொண்டு மக்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இங்கு இதுவரை பிறந்த 17 நாள்களே ஆன குழந்தை முதல் 78 வயது முதியவர் வரை, அனைத்துத் தரப்பினருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்தோ - திபெத் எல்லைக் காவல் படையினர் பேசுகையில், ''ஜூலை 5ஆம் தேதி முதல் கோவிட்-19 சிகிச்சை இங்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை மூன்றாயிரத்து 921 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டாயிரத்து 454 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
81 பேர் மட்டும் வேறு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். கரோனா சிகிச்சைப் பெறும் அனைவருக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் இதனால் பலனடைந்துள்ளனர்.
சர்தார் படேல் சிகிச்சை மையம், சர்தார்பூர் மாவட்டத்தில் குறைந்த நேரத்தில் கட்டிமுடிக்கப்பட்டது. இதன்மூலம் ஏழை மக்கள் பலரும் சிறந்த மருத்துவ சிகிச்சையைப் பெற்றுள்ளனர். 10 ஆயிரம் படுக்கைகள் கொண்டுள்ள இந்த சிகிச்சை மையத்தில், வரும் காலங்களில் 12 ஆயிரமாக படுக்கைகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும்.
மற்ற மருத்துவமனைகளுடன் ஒப்பிடுகையில் இந்த சிகிச்சை மையத்தில் அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. சிறந்த மருத்துவர்களையும் மருத்துவ அலுவலர்களைக் கொண்டும் இங்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்தப் பணியில் 800க்கும் மேற்பட்ட மருத்துவத் துறை அலுவலர்களும், 600க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அலுவலர்களும் பணிபுரிந்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே நீட் தேர்வு' - பாஜக தலைவர் முருகன்!