மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கமல்நாத் முதலமைச்சராக உள்ளார். இவரது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை, அம்மாநிலத்தின் இளம் காங்கிரஸ் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா அண்மை காலமாக கடுமையாக விமர்சித்து வருகிறார்.
மாநிலத்தை ஆட்சி செய்யும் கமல்நாத், அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவருவதாகவும் சிந்தியா பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். சிந்தியா கருத்துக்கு கட்சியின் மீது அதிருப்தியில் இருப்பவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு இவ்வாறு கலகக் குரல் எழுவது கட்சி ஒருங்கிணைப்பை பாதிக்கும் என மூத்த தலைவர்கள் கவலைத் தெரிவித்துவருகின்றனர். இந்தப் பிளவை ஆரம்பத்திலேயே சீர் செய்ய வேண்டும் என முடிவெடுத்துள்ள காங்கிரஸ் கட்சி, தற்போது திக் விஜய் சிங்கை சமாதான தூதுவராக அனுப்புகிறது.
இன்று ஜோதிராதித்ய சிந்தியாவை சந்திக்கும் திக்விஜய் சிங், அவரின் எதிர்பார்ப்பைக் கேட்டறிந்து, கட்சி மேலிடத்திடம் அவரது எண்ணத்தை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த திக்விஜய் சிங், சிந்தியா தனது கருத்துக்களை முன்வைத்துள்ளாரே தவிர, கமல்நாத்தை எதிர்க்கும் நோக்கில் செயல்படவில்லை என்றும், மத்தியப் பிரதேச காங்கிரஸ் என்றும் போல் ஒற்றுமையகவே உள்ளது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மருத்துவக் கல்வி முறையில் என்னென்ன மாற்றங்கள் தேவை? - ரன்தீப் குழு பரிந்துரை