புதுச்சேரியில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு பெட்ரோல், டீசலுக்கு, கரோனா மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்பட்டது. இந்நிலையில், புதிய வரியை ரத்து செய்ய வேண்டி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஆகஸ்ட் 28) உத்தரவிட்டது. அதில், பெட்ரோல், டீசல் வரியை புதுச்சேரி அரசு உயர்த்தியது செல்லாது எனவும், மதிப்புக்கூட்டு வரி சட்டப்பிரிவு 31-ஐ பயன்படுத்தி பெட்ரோல், டீசல் வரியைக் குறைக்க மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளதால், வரியை உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்வதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனையடுத்து, பெட்ரோல், டீசலுக்குப் புதிய மதிப்புக்கூட்டு வரியை புதுச்சேரி அரசு விதித்துள்ளது. அதனடிப்படையில் டீசல் லிட்டருக்கு ரூ.1.34 குறைந்து ரூ.77.89க்கு விற்பனை ஆகிறது. பெட்ரோல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் ரூ.83.49க்கு விற்பனையாகிறது. இந்தப் புதிய வரி மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
இதையும் படிங்க: புதுச்சேரி அரசின் உத்தரவு செல்லாது - உயர் நீதிமன்றம் அதிரடி