பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'Man vs Wild' நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதிலும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு கடந்தாண்டு பிரதமர் மோடி பியர் கிரில்ஸுடன் இணைந்து வன பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
பியர் கிரில்ஸுடன் கர்நாடக மாநிலம் பந்திபூரில் உள்ள புலிகள் காப்பத்தில் ’Man vs Wild' படப்பிடிப்பில் அவர் கீழே விழுந்ததால் அதில் லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, இன்றைய படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினி சராயு ரிசார்ட்டுக்கு சென்றார். அங்கிருந்து பெங்களூருக்கு விமானம் மூலம் சென்றார்.
இதுதொடர்பாக அங்கிருந்த வனத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டபோது "ரஜினி சாருக்கு பெரிதாக எந்த காயமும் ஏற்படவில்லை. இன்றைய படப்பிடிப்பில் அவர் தடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதனால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் இப்பொழுது நலமாக இருக்கிறார்" என்றனர்.