மகாராஷ்டிராவின் மாலேகான் மசூதி அருகே நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் சிக்கி விடுதலையானவர் பிரக்யா சிங் தாகூர். இவருக்கு மத்தியப்பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதியில் இருந்து போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியது.
மக்களவை தேர்தலில் இவர் போட்டியிடுவதற்கு தடை விதிக்கக்கோரி மாலேகான் குண்டுவெடிப்பில் உயிரிழந்த சையத் அகமது என்பவரின் தந்தை தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நேற்று தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வி.எஸ்.படால்கர், 2016 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் அவரை தண்டிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை என கூறினார்.
மேலும், தேர்தலில் போட்டியிட பிரக்யா சிங் தாகூருக்கு தடை விதிப்பதற்கு இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிட தனக்கு தடைவிதிக்கக் கோரிய வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, உண்மைக்கு கிடைத்த வெற்றி என, மத்தியப்பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர் தெரிவித்துள்ளார். தன் மீது காங்கிரஸ் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.