மேற்கு வங்க மாநிலத்தில் அரசியல் கொலைகள் அதிகரித்துள்ளதாக பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரத்தை மாநில அரசு சரியாக கையாளவில்லை என ஆளுநர் ஜகதீப் தங்கர் தெரிவித்துள்ளார். ஆனால், ஆளுநர் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
இதற்கிடையே, பாஜக கவுன்சிலர் மணி சுக்லா படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, 12 மணி நேரம் முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுத்தது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. இது குறித்து நான் எச்சரித்தும் அரசியல் கொலைகள் தொடர்கின்றன.
காவல் துணை கண்காணிப்பாளர், காவல் துறை இயக்குநர் ஆகியோர் இது குறித்து இன்னும் பதில் அளிக்கவில்லை. உங்களிடம் (மம்தா) அவசரமாக பேச வேண்டும். உங்களின் மௌனம் பல அர்த்தங்களைத் தருகிறது" என்றார்.
மேற்குவங்க பாஜக மேலிட பொறுப்பாளர் கைலாஷ் விஜய்வர்கியா, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.