சென்னையிலிருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் பயணம் செய்த பெண், தனது 75 வயது தாயார் விமானத்திலிருந்து இறங்குவதற்கு, பொத்தன் மூலம் நாற்காலி வேண்டுமென்று உதவி கேட்டுள்ளார். ஆனால், விமான ஊழியர்கள் நாற்காலியுடன் தாமதமாக வந்துள்ளனர். அப்போது, அந்தப் பெண் 'தாயாருக்காக நான் முன்னரே நாற்காலி உதவி கேட்டிருந்தும், ஏன் தாமதம் செய்கிறீர்கள்' என்று கேட்டுள்ளார்.
அப்போது, திடீரென்று இண்டிகோ பைலட், அப்பெண்மணி மற்றும் மூதாட்டியை அச்சுறுத்தும் தொனியில் பேசி மிரட்டியுள்ளார். 'உங்களுக்கு நாகரிகம் தெரியவில்லை. இரண்டு பேரையும் கைது செய்ய வைப்பேன்' என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பத்திரிகையாளரான அந்தப் பெண் சுப்ரியா உன்னி நாயர், தனது தாயார் விஜயலட்சுமிக்கு ஏற்பட்ட கொடுமையை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அந்த இண்டிகோ பைலட் ஜெயகிருஷ்ணா மீது நடவடிக்கை எடுக்கும் படியும் கேட்டிருந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் இண்டிகோ நிறுவனத்தின் இரக்கமற்ற செயலுக்கு தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இதனிடையே பத்திரிகையாளர் சுப்ரியாவிற்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி டி, இது தொடர்பாக விசாரிக்கிறேன் என்று பதிலளித்தார்.
அதன்படி, பைலட்டிடம் விசாரணை செய்த டி.ஜி.சி.ஏ (DGCA) அலுவலர்கள், மூதாட்டிக்கு உதவாத இரக்கமற்ற செயலைக் கண்டித்து, மூன்று மாதங்கள் பைலட்டை பணி இடைநீக்கம் செய்தனர். இதையடுத்து, விரைவாக நடவடிக்கை எடுத்த மத்திய அமைச்சருக்கு, பத்திரிகையாளர் சுப்ரியா நன்றி தெரிவித்து ட்வீட் செய்தார்.
இதையும் படிங்க: தருமபுரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தீக்குளிக்க முயற்சி