கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு தவறிவிட்டது எனவே ஜனாதிபதி ஆட்சியை மகாராஷ்டிராவில் அமல்படுத்தவேண்டும் என்று பாஜக தலைவர்கள் சிலர் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியிடம் வலியுறுத்தியுள்ளனர். இதனை ஆளும் கூட்டணி அரசு கண்டித்ததோடு, ஆளும் அரசை கவிழ்க்க பாஜக சதி செய்கிறது என்றும் தெரிவித்தது.
இதுகுறித்து பேசிய முன்னாள் முதலமைச்சர் பட்னாவிஸ், "ஆளுநரைச் சந்திக்க அனைவருக்கும் உரிமை உண்டு. கரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஆளும் கூட்டணி அரசு தோல்வியடைந்துள்ளது. இதனை மறைக்க, பாஜக ஆட்சியை கவிழ்க்க சதி செய்கிறது. ஆளுநரிடம் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வலியுறுத்துகிறது என மக்களிடையே கருத்துகளைப் பரப்பிவருகிறது.
முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆறு மாதகால மகாராஷ்டிரா அரசாங்கத்தை கவிழ்க்க நாங்கள் அக்கறை காட்டவில்லை. தற்போது, கரோனாவை திறம்பட கையாளவே விரும்புகிறோம். அவர்களின் கூட்டணியில் உள்ள முரண்பாடுகளே அவர்களுடைய ஆட்சியைக் கவிழ்த்துவிடும். கடந்த மூன்று மாதங்களில் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு மத்திய அரசு, 28,104 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. சமீபத்தில் அறிவித்துள்ள தொகுப்புகளின் படி மாநில அரசு 2,71,500 கோடி ரூபாய்வரை கடன் பெறலாம்" என்று தெரிவித்தார்.
பட்னாவிஸின் கருத்தை விமர்சித்துப் பேசிய சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத்," கரோனாவுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்காததைப் போலவே ஆளும் கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக சூத்திரத்தை கண்டுபிடிக்கவில்லை. ஆனால், அரசை கவிழ்க்கும் முயற்சிகளில் பாஜக ஈடுபட்டுவருகிறது. மகாராஷ்டிராவுடன், குஜாராத்தை ஒப்பிடுகையில் குஜாராத்தில்தான் கரோனா தொற்று பாதித்தவரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என்றால் குஜராத்தில்தான் முதலில் அமல்படுத்தவேண்டும்" என்றார்.
இந்தபரபரப்பான அரசியல் சூழ்நிலையில், "அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் எங்களுடன்தான் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் அவற்றை பாஜக உடைக்க முயற்சித்தால் பாஜக மக்களின் கோபத்தை சம்பாதிக்கும். எங்கள் கூட்டணி வலுவாகத்தான் உள்ளது" என்று தனியார் தொலைக்காட்சிக்கு சரத் பவார் பேட்டியளித்தார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பேச்சாளர் நவாப் மாலிக், "தேவேந்திர பட்னாவிஸ் அரசியலில் தொடர்வதை விட கடன்பெறுவது எப்படி என்ற ஆலோசனை மையத்தை அவர் தொடங்கலாம். அதில், அவர் உறுதியாக வெற்றிபெறுவார். கடந்த ஆட்சிக்காலத்தில் மத்திய அரசிடமிருந்து அதிக கடன்களைப் பெற்று கடன் நிறைந்த மாநிலமாக மகாராஷ்டிராவை மாற்றியுள்ளார்" என தேவேந்திர பட்னாவிஸை விளாசியுள்ளார்.
இதையும் படிங்க: சிவசேனாவை விமர்சித்தாரா ராகுல் ? - ஃபட்னாவிஸ் குற்றச்சாட்டு