ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் உள்பட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தொலைத் தொடர்பு வசதிகள் முடக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா, ஃபருக் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் மீது பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. இதையடுத்து, உமர் அப்துல்லா, ஃபருக் அப்துல்லா மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், மெகபூபா முப்தி தொடர்ந்து வீட்டு காவலில் அடைக்கப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அவரின் காவல் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சியின் மூத்தத் தலைவருமான அலி முகமது சாகர், மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்தத் தலைவர் சர்தஜ் மதானி ஆகியோரின் காவலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசு விருந்தினர் மாளிகையில் அடைக்கப்பட்டிருந்த முப்தி, அவரது இல்லத்துக்கு ஏப்ரல் ஏழாம் தேதி மாற்றப்பட்டார். முப்தியின் வீட்டுக் காவலை எதிர்த்து அவரின் மகள் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை மார்ச் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. கரோனா வைரஸ் நோயின் காரணமாக இந்த வழக்கின் விசாரணை அதற்கு பிறகு நடைபெறவில்லை.
இதையும் படிங்க: பிரதமர் மோடியால் அதிகரித்த ஆயுர்வேத மருந்துகளின் விற்பனை...!