உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் கோவிட்-19 பெருந்தொற்று கடந்த 30 நாள்களாக இந்தியாவில் இரண்டாம் கட்ட பரவல் நிலையை எட்டி தீவிரமடைந்துவருகிறது. இதுவரை 12 ஆயிரத்து 456 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 423 பேர் உயிரிழந்தனர் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழுமையான ஊரடங்கை மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதன் காரணமாக, விவசாயிகள் சாகுபடிசெய்த காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப்பொருள்களை விற்க முடியாமலும், உரிய விலை கிடைக்காமலும், பரிதவித்துவருகின்றனர். விளைந்த வேளாண் பொருள்களைப் பத்திரப்படுத்தவும் முடியாமல், உற்பத்திக்குத் தேவையான பொருள்களை வாங்கவும் வழியின்றி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர்.
அகில் பாரதிய கிஷன் குழுவின் அமைப்பாளர் வி.எம். சிங் கூறுகையில், "உற்பத்தியாளர்களை குறிப்பாக சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைப்பதற்கான பொறுப்பான உழவர் உற்பத்தியாளர் அமைப்பு (எஃப்.பி.ஓ) பயிர்களை விவசாயிகளிடமிருந்து வாங்குவதில் ஈடுபட்டுள்ளது என்று அரசாங்கம் கூறுகிறது. உண்மையில், அத்தகைய ஏற்பாடுகள் எதுவும் நிர்வாகத்தால் செய்யப்படவில்லை.
இந்தப் பரிதாப நிலையில், விவசாயிக்கு அவர்களின் பயிர்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் (எம்.எஸ்.பி) வாங்கப்படும் என்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும்.
அரசாங்கத்தின் மெளனத்தால், விவசாயிகள் தங்கள் பயிர்களைத் தனியார் நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த விலையில் விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே, நிபந்தனையின்றி விவசாய விளைப் பொருள்களை அரசு கொள்முதல் செய்திட முன்வர வேண்டும்
தொடர்ந்து இயங்க தடைவிதிக்கப்பட்டிருந்த தள்ளுவண்டிகள், விவசாய இடுப்பொருள் கடைகள், வேளாண் துறைக்கு உதவும் பொருள்களை வழங்கும் நிறுவங்களின் இயக்கத்திற்கு அரசாங்கம் தளர்வு அளித்திருந்தது.
இருப்பினும், அரசாங்க வழிகாட்டுதல்களைக் காவல் துறையினர் மதிப்பதில்லை. மேலும் சிறு, குறு விவசாயிகளைத் தொடர்ந்து இம்சித்துவருகின்றனர். இதற்கு அரசு தீர்வு காண முன்வர வேண்டும்” என்றார்.
கிஷன் சக்தி சங்கத்தின் இயக்குநர் சவுத்ரி புஷ்பேந்திர சிங் கூறுகையில், “கரோனா ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு சிறப்பு நிவாரண உதவிகளை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
தற்போது, அவர்கள் பிரதமர்-விவசாயம் திட்டத்தின்கீழ் 6 ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள். இந்தத் தொகையை 24 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும். கிஷன் கிரெடிட் கார்டின் வரம்பை இரட்டிப்பாக்க வேண்டும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அதன் மீதான வட்டி விகிதம் 1 விழுக்காடாகக் குறைக்கப்பட வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள வட்டியில்லா நகைக்கடன், வேளாண் கடன்களுக்கான தவணைக்காலம் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் கரோனா ஊரடங்கை முன்னிட்டு தவணைக்காலத்தை 3 மாதம் மத்திய அரசால் நீட்டிக்கப்பட்ட நிலையில், அதனை கூட்டுறவு வங்கிகளுக்கு உரிய அறிவிப்பு செய்யாததால் 13 விழுக்காடு வட்டி போட்டு கெடுபிடி வசூலில் ஈடுபட்டுவருவதால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
இந்திய உணவு மற்றும் வேளாண் சேம்பர் தலைவர் எம்.ஜே. கான் கூறுகையில், “விவசாய நிலத்திலிருந்து சேமிப்புக் கிடங்குகளுக்கு விளைந்த பயிர்களைக் கொண்டுசெல்ல அரசாங்கம் ஏற்பாடுசெய்ய வேண்டும். இது ரபி பயிர்களின் அறுவடை நேரம்.
செயல்முறைக்கு அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் தேவை. எனவே, தினசரி வருவாய் ஈட்டுபவர்களை விவசாய நிலங்களுக்கு கொண்டுசெல்ல சிறப்பு ரயில்கள், பேருந்துகள் ஆகியவற்றை இந்த மையம் ஏற்பாடு செய்ய வேண்டும். இது புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே வேலையின்மை பிரச்னையை குறைக்கும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : புதுச்சேரியில் பெண் காவலரிடம் ஆபாசமாகப் பேசிய ஆண் காவலர் மீது வழக்குப்பதிவு