மகாராஷ்டிரா மாநிலம், சிர்பூரையடுத்துள்ள பத்பூரா கிராமத்தைச் சேர்ந்த நபருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த நபரும், அவரது மனைவியும் துலே நகரில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த மே 22ஆம் தேதி சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர், சிகிச்சைப் பலனின்றி கடந்த மே25ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் ஒருநாள் முழுவதும் மருத்துவமனையிலேயே கிடந்துள்ளது. இதையடுத்து, மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறையைக் காரணம்காட்டி, உயிரிழந்தவருக்கு இறுதிச்சடங்கு செய்ய முடியாது என மருத்துவ நிர்வாகம், உயிரிழந்தவரின் மனைவியிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இறுதியாக, சிர்பூர் வட்டாட்சியர் சில நபர்களின் உதவியோடு உயிரிழந்த அந்த நபருக்கு இறுதிச்சடங்கு செய்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐந்து நாள்களாகியும் உயிரிழந்த நபரின் மனைவிக்கு மருத்துவ நிர்வாகம் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளவில்லை, அவரது மாதிரிகளையும் சேகரிக்கவில்லை.
இதனால், உடல்நிலை பாதிக்கப்பட்டு நிர்கதியாக இருந்த அப்பெண், கடந்த மே 26ஆம் தேதி காலை மருத்துவமனையிலிருந்து, தனது சொந்த ஊருக்கு நடந்தே செல்ல முடிவெடுத்தார். நடைப்பயணமாகவே 70 கிலோமீட்டர் நடந்து சென்ற, அப்பெண் தனது கிராமத்தை நெருங்கியபோது, அவரது உறவினரால் சிர்பூர்-சோப்டா சாலையில் அடையாளம் காணப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக ஷிங்கேவ் கிராமத்தில் உள்ள கரோனா மையத்தில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, அப்பெண்ணின் அவல நிலைக்கு காரணமான மருத்துவ நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கிராமவாசிகள் கோரியுள்ளனர்.
இதுபோன்ற சம்பவம் அங்கு நடப்பது ஒன்றும் புதிதல்ல.
முன்னதாக, ஆர்தே கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், தங்களுக்கு கரோனா சோதனை மேற்கொள்ளாமலேயே துலேவில் உள்ள மருத்துவமனையில் இருந்து ஆர்தே கிராமத்திற்குத் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இயற்கை இரக்கமற்றது: தி பேர்ட்ஸ், லோக்கஸ்ட் அட்டாக், கார்ப்பரேட் எதிர்ப்பு..!