உத்தரப் பிரதேசத்தின் பாங்கர்மவு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் ஸ்ரீகாந்த் கட்டியரை ஆதரித்து இன்று உன்னாவ் எம்.பி., சாக்ஷி மகராஜ் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது கூட்டத்தில் பேசிய அவர், "ஒரு இஸ்லாமியர் இறந்தால், அவரது காப்ரிஸ்தானுக்கு பெரும் அளவில் நிலம் ஒதுக்கப்படுகிறது. இந்தியாவில் 20 கோடி இஸ்லாமியர்கள் உள்ளனர். இறந்த பின்னர், அவர்கள் அனைவரையும் புதைக்க வேண்டும் என்றால் அவ்வளவு நிலம் எப்படி கிடைக்கும் ?
அதே நேரத்தில் இந்துக்கள் இறந்தால் அவர்களது உடல்கள் வயல்வெளிகளில் தகனம் செய்ய வேண்டியுள்ளது. இது மிகப்பெரிய அநீதி இல்லையா?
இந்தியாவில் சுமார் 2 கோடி முதல் 2.5 கோடி 'சாதுக்கள்' உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 'சமாதிகள்' கட்டத் தொடங்கினால், அதற்கு எவ்வளவு நிலம் தேவைப்படும் என கற்பனை செய்து பாருங்கள். நாமும் நமக்கு நிலம் கேட்கலாமா ? அப்படி கேட்டால் நாடு என்னவாகும் ?
எனவே, அரசு இரு மத பிரிவினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கேற்ப இடுகாடுகளையும், தகன மைதானங்களையும் வழங்க நிலங்களை நிர்ணயம் செய்ய வேண்டும்.
இந்துகளைப் போல இஸ்லாமியர்களும் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு பதிலாக எரிக்க ஆரம்பிக்க வேண்டும். எங்கள் பொறுமையும் கண்ணியமும் சோதிக்கப்படக்கூடாது" என கூறினார்.
உன்னாவ் எம்.பி., சாக்ஷி மகாராஜின் இந்த பேச்சு நாடு முழுவதும் மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது. மதங்களுக்கிடையே வெறுப்புணர்வைத் தூண்டுவதாக அவரது பேச்சுக்கும் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சமாஜ்வாடி கட்சி, "ஒவ்வொரு தேர்தலிலும் தங்களது வாக்கு வங்கியைத் தக்க வைக்கவும், வெற்றியை உறுதி செய்யவும் அவர்கள் மதங்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்த இத்தகைய வெறுப்பு அரசியலை பின்பற்றுகின்றனர்" என்று கூறியுள்ளது.