டெல்லி வன்முறை தொடர்பாக கமல் ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில்,
'வேற்றுமையிலும் ஒன்றுபட்ட இந்தியாவில், வெறுப்பின் பிள்ளைகள் தறிகெட்டுத் திரிவதை எப்படி அனுமதிப்பது. நிறுத்துங்கள். காலம் கடக்கும் முன் காரணம் குறித்து சிந்திக்கத் திரும்புங்கள்.
மனிதர்களே வெறுப்பை போதிப்பார்கள், மதங்கள் இல்லை. முன்புபோல் மீண்டும் இந்தியா இந்த வெறியாட்டத்திலிருந்து மீண்டுவர விழைகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்தச் சம்பவத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 191 பேர் வரை காயமுற்றுள்ளனர்.
இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் தெரிவித்து அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.