டெல்லியின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர் சுனிதா செளத்ரி. இவர் தனது பழைய ஆட்டோவை மாற்றி புது ஆட்டோ வாங்குவதற்காக ரூ.30,000 பணத்தை எடுத்துக்கொண்டு மீரட்டிலுள்ள தனது வீட்டிற்கு ஷேர் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஷேர் ஆட்டோ ஓட்டுநர் சுனிதாவின் பணத்தைக் கொள்ளையடித்துள்ளார்.
இது குறித்து சுனிதா செளத்ரி கூறும்போது, ‘நான் எனது வீட்டிற்கு ஆனந்த் நகரில் இருந்து ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தேன். நான் ஷேர் ஆட்டோவில் ஏறும்போது ஆட்டோவின் பின்பக்க இருக்கையில் இரண்டு ஆண்களும், ஷேர் ஆட்டோ ஓட்டுநரின் அருகில் முன்பக்க இருக்கையில் ஒருவரும் அமர்ந்திருந்தனர். நான் முன்பக்கத்தில் அமர்ந்திருந்தேன்.
ஷேர் ஆட்டோ ஓட்டுநர், திடீரென ஆட்டோ இன்ஜினில் கோளாறு எனவும், ஆட்டோ ஓடவில்லை எனவும் கூறி இறங்கி ஆட்டோவைத் தள்ளச் சொன்னார். அப்போது நான் எனது பணப்பையை பின்பக்க இருக்கையில் வைத்துவிட்டு இறங்கித் தள்ள ஆரம்பித்தேன்.
இதனையடுத்து, திடீரென ஷேர் ஆட்டோவிலிருந்தவர் எனது பையை என்னிடம் கொடுத்து வேறு ஆட்டோவில் ஏறச் சொன்னார். பதறி அடித்துக் கொண்டு நான் என் பையை சோதித்தபோது புது ஆட்டோ வாங்குவதற்காக நான் வைத்திருந்த ரூ.30, 000 கொள்ளையடிக்கப்பட்டது அறிந்தேன்.
பின்னர் வேறு ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு என் பணம் காணாமல்போன ஷேர் ஆட்டோவை துரத்த ஆரம்பித்தேன். ஆனால் என்னால் துரத்திப் பிடிக்க முடியவில்லை’ என வேதனையாகத் தெரிவித்தார்.
டெல்லியின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநரின் பணம் மற்றொரு ஆட்டோ ஓட்டுநராலே கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.