தேசிய தலைநகர் பகுதியில் குளிர் காலம் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பிருந்தே காற்று மாசு மோசமடைய தொடங்கியது. டெல்லியில் பல்வேறு பகுதிகளிலும் காற்று மாசு மிக மோசம் என்ற நிலையிலேயே உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் காற்று தர மதிப்பீட்டின் சராசரி 346ஆக உள்ளது. முன்னதாக, இது திங்கள்கிழமை 318ஆகவும் ஞாயிற்றுக்கிழமை 268ஆகவும் இருந்தது. மேலும், செவ்வாய்க்கிழமை டெல்லியில் காற்றின் வேகம் அதிகபட்சமாக 8 கிமீ வேகத்திலேயே வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், வெப்பநிலையும் அதிகபட்சம் 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 8.1 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை சாதகமற்று இருப்பதால் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மிக மோசம் என்ற நிலையிலேயே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலைமை மோசமானால் டிசம்பர் 7ஆம் தேதி காற்று தர மதிப்பீடு மிக மிக மோசம் என்ற நிலையையும் அடைய வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. காற்றின் வேகம் 10 கிலோமீட்டருக்கு குறைவாக இருந்து வெப்பநிலையும் குறைவாக இருந்தால் சுற்றுப்புறத்தில் இருக்கும் மாசு ஒரே இடத்தில் இருக்கும் அபாயம் உள்ளது.
அறுவடை காலம் முடிந்துவிட்டதால் அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசு பெருவாரியாக குறைந்துள்ளது. இதன் காரணமாக டெல்லி பகுதியில் ஏற்படும் காற்று மாசு ஞாயிற்றுக்கிழமை 7 விழுக்காடாக இருந்தது. திங்கள்கிழமை இது 6 விழுக்காடாக குறைந்துள்ளது.
இதையும் படிங்க: 'திருமணத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய புது சட்டம்' - அஸ்ஸாம் அமைச்சர்