தேசியத் தலைநகர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே வாகனப் புகை, அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகளை எரிப்பது, கட்டுமான இடங்களில் இருந்து வெளிவரும் தூசு உள்ளிட்ட காரணங்களால் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. காற்று மாசைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இருப்பினும் மாசுபடுதல் குறைந்தபாடில்லை.
டெல்லியில், குறிப்பாக குளிர்காலம் தொடங்கியதில் இருந்து காற்றின் தர மதிப்பீடு மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் காற்று மாசு ’மிக மோசம்’ என்ற நிலையில் உள்ளது. அதில் குறிப்பாக ஆனந்த் விஹார், அசோக் விஹார், விவேக் விஹார் உள்ளிட்ட ஆறு இடங்களில் காற்று மாசு ’மிக மிக மோசம்’ என்ற நிலையில் உள்ளது.
தலைநகர் பகுதியில் காற்று மாசு அதிகரிப்பதற்கு அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகளை எரிப்பதே காரணம் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி வருகிறார்.
இருப்பினும், இது குறித்து புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்று தர கண்காணிப்புக் குழு, "அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகளை எரிப்பது கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் காற்று மாசு ஆறு விழுக்காடு மட்டுமே அதிகரிக்கிறது.
டெல்லி பகுதியில் காற்றின் வேகம் குறைந்துள்ளதே, காற்று மாசு அதிகரிக்க காரணம். இத்துடன் விவசாயக் கழிவுகளை எரிப்பதும் இணையும்பட்சத்தில் தலைநகரில் காற்று மாசு மீண்டும் உச்சத்தைத் தொடும்" எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: உபரி நிதி விவகாரம் குறித்து விளக்கும் சிதம்பரம்!