தேசிய தலைநகர் பகுதியில் காற்றின் தரம் கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும் மோசமாக பாதிக்கப்படுகிறது. தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகை, வாகன புகை, கட்டட தூசு ஆகியவற்றுடன் அண்டை மாநில விவசாய கழிவுகளை எரிக்கப்படுவதும் இணைந்துகொள்வதால் டெல்லி மிக மோசமாக மாசடைகிறது.
இந்தச் சூழ்நிலையில் கரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் டெல்லியில் காற்று மாசு பெருமளவு குறைந்து, காற்றின் தரமும் மேம்பட்டது. இருப்பினும், தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள், தொழிற்சாலைகள் என அனைத்தும் வழக்கம்போல இயங்கத் தொடங்கிவிட்டன.
இதன் காரணமாக டெல்லியில் காற்றின் தரம் மீண்டும் மோசமானது. குறிப்பாக கடந்த புதன்கிழமை (அக், 14) காற்றின் வேகம் குறைந்ததால் காற்றின் தரம் "மிகவும் மோசம்" என்ற நிலையை அடைந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தேசிய தலைநகர் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், காற்றின் தரம் தொடர்ந்து மேம்பட்டுவருகிறது. இன்று (அக்.20) காலை டெல்லியில் காற்று தர மதிப்பீடு 227 என்று உள்ளது. அதாவது ஒரு வாரத்தில் டெல்லியில் காற்றின் தரம் 'மிக மோசம்' என்ற நிலையிலிருந்து 'மோசம்' என்ற நிலைக்கு மேம்ப்பட்டுள்ளது.
முன்னதாக, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவதால் டெல்லியில் வெறும் நான்கு விழுக்காடு மட்டுமே காற்று மாசு அதிகரிக்கிறது. மீதமுள்ள 96 விழுக்காடு, உள்ளூர் காரணிகளான தூசி, கட்டுமானப் பணிகள், குப்பைகளைக் கொட்டுதல், கட்டட இடிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றால் ஏற்படுகிறது" என்று தெரிவித்திருந்தார்.
மத்திய அமைச்சரின் இந்தக் கருத்தை கடுமையாக சாடிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "விவசாயக் கழிவுகளை எரிப்பதால் வெறும் நான்கு விழுக்காடு மட்டுமே காற்று மாசு ஏற்படுகிறது என்றால், கடந்த 15 நாள்களில் காற்று மாசு திடீரென்று அதிகரித்தது ஏன் அதற்கு முன்புவரை காற்று சுத்தமாக இருந்தது" என்று தெரிவித்திருந்தார்.
காற்றின் தரம் 0 முதல் 50க்குள் இருந்தால் காற்றின் தரம் 'நன்றாக' உள்ளது என்று பொருள், அதேபோல காற்றின் தரம் 51 முதல் 100 வரை இருந்தால் 'திருப்தி' என்றும் 101 முதல் 200 வரை இருந்தால் 'மிதமானது' என்றும் அர்த்தம்.
அதேநேரம் காற்றின் தரம் 201 முதல் 300 இருந்தால் 'மோசம்' என்றும் 301 முதல் 400 வரை இருந்தால் 'மிகவும் மோசம்' என்றும் பொருளாகும். 401 முதல் 500 வரை காற்றின் தரம் இருந்தால் அது மிக மிக மோசமான நிலையாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: தெலங்கானாவில் இன்னும் இரண்டு நாளுக்கு மழை? எச்சரிக்க்கும் இந்திய வானிலை ஆய்வு மையம்!