குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தலைநகர் டெல்லி வடகிழக்குப் பகுதியில் நடந்துவந்த போராட்டம், கடந்த இரு தினங்களில் வன்முறையாக மாறியது. இந்த வன்முறை தொடர்பான சம்பவங்களில் இதுவரை ஒரு காவல் துறை அலுவலர் உட்பட 18 பேர் உயிரழந்துள்ளனர்.
இந்தக் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலுக்கு பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே, கலவரம் நடந்த ஜாஃபராபாத், சீலாம்பூர் உள்ளிட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட அஜித் தோவால் நிலைமை குறித்து அங்கிருந்த காவல் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், மருத்துமனைக்குச் சென்ற அவர், கலவரத்தில் காயமடைந்தவர்களைச் சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து, டெல்லி கலவரத்தின் தற்போதைய நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்பு குழுவுடன் அஜித் தோவால் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, நேற்று மாலை டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதலாகக் காவல் துறையினரைப் பணியில் ஈடுபடுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும், கலவரத்தில் ஈடுபடாமல் டெல்லி மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க : அதிர்ச்சி : ஈரான் சுகாதாரத் துறை இணை அமைச்சருக்கு கொரோனா !