கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், வரும் மார்ச் 31ஆம் தேதி வரை டெல்லி முடக்கப்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜலுடன் நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "தேசிய தலைநகரின் அனைத்து எல்லைகளும் மூடப்படும்.
இருப்பினும் சுகாதாரம், உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் தொடர்ந்து செயல்படும். அத்தியாவசிய தேவைகளை மேற்கொள்ள செல்பவர்களுக்கு உதவியாக 25 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயங்கும்" என்றார்.
இந்தத் தடை உத்தரவு வரும் மார்ச் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
டெல்லியில் இதுவரை 27 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்குப் பிடித்தமின்றி முழு ஊதியத்தை வழங்கவேண்டும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: கரோனாவுக்கு எதிரான தொழில்நுட்ப போர்: பின்னணி என்ன?