டெல்லி விஜய் நகர் சவுக்கில் வசித்துவந்த ஜம்மு-காஷ்மீர் இளைஞரை டெல்லி காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் இன்று (ஆக.26) கைது செய்தனர்.
அவரிடமிருந்து ஒரு ஜோடி ஆதார் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை இரண்டும் வெவ்வேறு பெயர்களைக் கொண்டுள்ளன.
கிடைத்த தகவல்களின்படி, சந்தேகத்திற்கிடமான இந்த இளைஞர் நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி வந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து இவர் மத்திய ரிசர்வ் காவல் படையினரால் (சிஆர்பிஎஃப் ) கைதுசெய்யப்பட்டார். அவரது நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் அடைந்த சிஆர்பிஎஃப் அலுவலர்கள் நகர காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அதன் பின்னர் அவரிடம் டெல்லி காவலர்கள் விசாரணை நடத்தினார்கள். அப்போது, தன்னை பற்றிய விவரங்களைக் கூற மறுத்த அந்த நபர், தங்களை சிலர் தவறாக வழி நடத்துவதாகக்கூறினார்.
மேலும், அவர் வைத்திருந்த குறியீட்டு வார்த்தைகளில் எழுதப்பட்ட சில தகவல்களைக் கொண்ட ஒரு ஆவணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆதார் அட்டைகளில் இரண்டு பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் வைத்திருந்த பை குறித்தும் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.
அந்த நபர் விசாரணையின்போது, தகவல்களை மாற்றி மாற்றி அளிப்பதால் அவர் மீது சந்தேகம் அதிகரித்துள்ளதாக தெரிவித்த காவல்துறையினர், நாடாளுமன்ற மாளிகை காவல் நிலையத்தில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும் தெரிவித்தனர்.