டெல்லி கோகால்பூரி பகுதியைச் சேர்ந்தவர் ஷாய்ரூதின். இவருக்கு ஹாசிம், ஆமீர் என இரண்டு இளைய சகோதரர்கள் உள்ளனர். டெல்லி வன்முறை உச்சத்திலிருந்தபோது தனது குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்க காசியாபாத்திலிருந்து கோகால்பூரிக்குச் செல்ல அவர்கள் முயற்சித்தனர். வன்முறையால் கோகால்பூரி பெரிதும் பாதிப்படைந்ததாகவும், தற்போதைக்கு வர வேண்டாம் எனவும் குடும்பத்தினர் ஹாசிம், ஆமீர் ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களின் இறப்பு செய்தி மட்டுமே குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர்களின் மற்றொரு சகோதரன் அக்ரம் கூறுகையில், "எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தபோதிலும், வீட்டிற்கு வர ஆமீர் விரும்பினான். மேலும், அப்பகுதி குறித்து தனக்கு நன்றாகத் தெரியும், எனவே வீட்டிற்கு பாதுகாப்பாக வருவேன் எனவும் அவன் தொலைபேசியில் கூறினான். இதற்குப் பிறகு பலமுறை அவர்களை அழைத்தேன். ஆனால், அழைப்பு செல்லவில்லை. அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டதாக நினைத்தேன். ஆனால், அவர்கள் இறுதிவரை அங்கும் செல்லவில்லை வீட்டிற்கும் வரவில்லை. இதுகுறித்து, காவல்நிலையத்தில் புகார் அளித்தோம்" என்றார்.
வன்முறையில் சிக்கி சகோதரர்கள் உயிரிழந்ததாகவும், அவர்களின் உடல் சாக்கடையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் காவல் துறையினர் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். அவர்களின் உடல் தற்போது மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆர். எஸ். எஸ். ஆண்டுக் கூட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கப்போகும் விவகாரங்கள்