மத்திய அரசின் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி, ஆகியவற்றுக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. வடகிழக்கு, டெல்லி ஆகிய பகுதிகளில் அமைதிவழியில் நடைபெற்ற போராட்டம் திடீரென பெரும் வன்முறையாக மாறியது.
இந்த வன்முறைகளில் 54 பேர் உயிரிழந்ததையடுத்து இது தொடர்பாக டெல்லி காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இவ்வழக்கில் இதுவரை 751 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, மாணவர் அமைப்புகளின் தலைவர்களான மீரான் ஹைதர், சஃபூரா ஜார்கர் உள்ளிட்ட 1,575 பேர் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் ஜே.என்.யு. முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 13ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.
இதற்கு நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள், அரசியல் இயக்கங்கள், ஜனநாயக ஆற்றல்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக எழுத்தாளர்கள், வழக்குரைஞர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், "அமைதி வழியில் நடைபெற்றுவந்த சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டத்தில் திடீரென வடகிழக்கு, டெல்லி பகுதிகளில் கலவரம் ஏற்பட காரணமாக இருந்த உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். அதற்காக நீதி விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும்.
இந்த வழக்குகளில் பொய் குற்றச்சாட்டில் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
மாற்றுக் கருத்துகளை எடுத்துரைக்கும் ஜனநாயகக் குரல்கள் படிப்படியாக அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுகின்றன.
இதில் மாணவர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள், ஆர்வலர்கள் என சிவில் சமூகத்தினர் அனைத்து அங்கத்தினரும் அடங்குவர். பாரபட்சம், தவறான நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த மூர்க்கத்தனமான விசாரணையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு நாங்கள் கோருகிறோம்.
உண்மையான குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கும் டெல்லி வன்முறைக்கு நீதியை உறுதி செய்வதற்கும் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜே.என்.யு. மாணவர் தலைவர் உமர் காலித்தை டெல்லி காவல் துறை செப்டம்பர் 13 அன்று கைதுசெய்த பின்னர் இந்த அறிக்கை வந்துள்ளது. காலித் மீது யுஏபிஏ கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த கூட்டு அறிக்கையில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் ஜே.என்.யு. மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார், சிபிஐஎம்எல் பொலிட்பீரோ உறுப்பினர் கவிதா கிருஷ்ணன், பத்திரிகையாளர் பமீலா பிலிபோஸ், நந்திதா நரேன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.