தேசத்தின் தலைநகரான டெல்லிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் பெரும் தலைவலியைக் கொடுத்தது அந்நகரில் உண்டான காற்று மாசு. காற்று தர மதிப்பீடு மிகவும் கவலையளிக்கும் நிலைக்குச் சென்றதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன, மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இந்தக் காற்று மாசுக்கு அண்டை மாநில விவசாயிகள் தங்கள் விவசாய கழிவுகளை எரிப்பதுதான் காரணம் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டினார். காற்றின் தரம் அபாயக் கட்டத்தைத் தாண்டினாலும், நிலைமை தொடர்ந்து மோசமாகவே இருந்துவந்தது.
இந்நிலையில், இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகள் தவிர ரயில்கள், பேருந்துகள், தொழிற்சாலைகள் என எதுவும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த நாடே ஸ்தம்பித்துள்ளது.
இருப்பினும் இந்த ஊரடங்கு உத்தரவால் டெல்லியின் காற்று மாசு சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு பெருமளவு குறைந்துள்ளது. காற்றில் உள்ள நுண்துகள்கள் PM 10இன் அளவு 32.5 மைக்ரோ கிராம்களாக உள்ளது. சில மாதங்களுக்கு முன், காற்று மாசு உச்சத்திலிருந்தபோது இது 387ஆக இருந்தது.
அதேபோல் டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரமும் தற்போது 40(நல்லது) ஆக உள்ளது. சில மாதங்களுக்கு முன் இந்த தரம் 400(மிக மோசம்) வரை சென்றது குறிப்பிடத்தக்கது. இத்துடன் சேர்ந்து டெல்லியின் சில பகுதிகளில் மழையும் பெய்ததால் தலைநகரின் வெப்பநிலையும் வெகுவாகக் குறைந்தது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் டெல்லி மற்றுமின்றி சர்வதேச அளவிலும் பல்வேறு நாடுகளில் காற்று உள்ளிட்ட அனைத்து வகையான மாசுகளும் வெகுவாகக் குறையும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா - ரூ. 1, 500 கோடி நிதியுதவி அளித்த டாடா