கரோனா வைரசின் (தீநுண்மி) தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. இந்நிலையில் தேசிய தலைநகரான டெல்லியில் புதிதாக இரண்டாயிரத்து 877 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,969 ஆக அதிகரித்துள்ளது எனச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், 24 மணி நேரத்திற்குள் 65 பேர் உயிரிழந்துள்ளனர். நகரத்தில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 243 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, டெல்லியில் இதுவரை கரோனாவால் 49 ஆயிரத்து 979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 23 ஆயிரத்து 341 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 26 ஆயிரத்து 669 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இதுவரை 3 லட்சத்து 21 ஆயிரத்து 302 பேரிடம் கரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது, நேற்று மட்டும் 8 ஆயிரத்து 726 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. புதன்கிழமை மட்டும் அதிகபட்சமாக 2,414 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில் "விரைவாக ஆன்டிஜென் முறை பரிசோதனை செய்ய டெல்லியில் 193 கோவிட்-19 பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், "7,040 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 456 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இப்போது, கட்டுப்பாட்டு மண்டலங்களில் விடுபட்டவர்களுக்கு கோவிட்-19 பரிசோதனையை மேற்கொண்டுவருகிறோம்" என்றார்.