டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு கிழக்கு டெல்லியில் உள்ள கொண்ட்லி பகுதியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது, “குடியுரிமை சட்டத் திருத்தம், அயோத்தியில் ராமர் கோயில், சட்டப்பிரிவு 370 நீக்கம் ஆகிய விவகாரத்தில் தங்களின் வாக்கு வங்கி எங்கே பாதிக்கப்படுமோ என ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அஞ்சுகின்றன” என்றார்.
மேலும் பொதுக்கூட்டத்தில் பாஜக தொண்டர்களைப் பார்த்து, “நீங்கள் அவர்களின் வாக்கு வங்கியா? என கேள்வியேழுப்பினார். அதற்கு அங்கிருந்தவர்கள், “இல்லை, இல்லை” என பதிலுரைத்தனர். இதைத்தொடர்ந்து அவர்களின் வாக்கு வங்கி யார்? என கேள்வி கேட்டார். அதற்கு கட்சித் தொண்டர்கள், “ஷாகீன் பாக்” என்றனர்.
இதற்கிடையில் பேச ஆரம்பித்த அமித் ஷா, “டெல்லி தேர்தல் இரு கட்சிகளுக்கு இடையேயானது அல்ல. இது இரு சித்தாந்தங்களுக்கு இடையேயான தேர்தல். ராகுலும், அரவிந்த் கேஜ்ரிவாலும் ஷாகீன் பாக் போராட்டக்குழுவினருக்கு ஆதரவு அளிக்கின்றனர். ஆனால் நரேந்திர மோடி நாட்டைப் பாதுகாக்கிறார்.
அரவிந்த் கேஜ்ரிவால் நம்பர் ஒன் பொய்யர். டெல்லி நகரில் 15 லட்சம் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி), ஐந்தாயிரம் (5,000) மாநகரப் பேருந்துகள், ஆயிரம் பள்ளிகள் மற்றும் இலவச இணையதள வசதி (வை-பை) என டெல்லி மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டது.
டெல்லியில் பாஜக அரசு அமைந்தவுடன் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் நிறைவேற்றப்படும். தேசவிரோத குற்றஞ்சாட்டில் உள்ள ஜே.என்.யூ. பல்கலை கனையா குமார், உமர் காலித் மற்றும் சர்ஜில் இமாம் ஆகியோர் மீது ஒரு மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
அயோத்தியில் ராமர் கோயில் அமையும் நம்பிக்கையை நரேந்திர மோடி அரசாங்கம் எகாதசி நாளில் அறிவித்துள்ளது. பிப்ரவரி 8ஆம் தேதி நீங்கள் அளிக்கும் வாக்கு, ஷாகீன் பாக் போராட்டக்காரர்களை அதிர்ச்சியடைய செய்ய வேண்டும்” என்றார்.
டெல்லியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள், பல மாநில முதலமைச்சர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் என பெரும்பட்டாளத்தை பாஜக களமிறக்கியுள்ளது. டெல்லியில் தேர்தல் பரப்புரை இன்று மாலை 5 மணியோடு நிறைவுபெறுகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வருகிற 11ஆம் தேதி மதியத்துக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மசூதி கட்டிக்கொள்ள சன்னி வஃக்பு வாரியத்துக்கு நிலம் ஒதுக்கீடு