டெல்லியில் காவல் துறையினரால் தேடப்பட்டுவரும் முக்கிய குற்றவாளிகள் வரிசையாக என்கவுன்டர் செய்யப்படுகின்றனர். அந்த வரிசையில் டெல்லியைச் சேர்ந்த சன்னி தபாஸ் என்பவர், கொலை, கொள்ளை உள்ளிட்ட 26 வழக்குகளில் தேடப்பட்டுவரும் குற்றவாளியாவார். இவர் தலைமறைவாக இருந்து காவல் துறையினரிடம் சிக்காமல் போக்குகாட்டி வந்துள்ளார்.
இந்நிலையில், தபாஸ் ஜூலை 5ஆம் தேதி தனது நண்பர்களை நரேலா தொழில் துறை பகுதியில் உள்ள பார்வாலா சாலையில் சந்திக்கவுள்ளதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்று அவரைப் பிடிக்க காவல் துறையினர் திட்டமிட்டனர்.
நள்ளிரவு 12:50 மணியளவில் தபாஸ் பைக்கில் பார்வாலா சாலை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, காவல் துறையினர் அவரை தடுத்துநிறுத்த முயற்சி செய்தனர். ஆனால், அவர் வண்டியை நிறுத்தாமல் தப்பியோட முயன்றுள்ளார். மீண்டும் காவல் துறையினர் தடுத்த நிறத்த முயன்றபோது, தபாஸ் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
அதன் பின்னர் காவலர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் காவலர் ஒருவர் தபாஸின் வலது காலில் துப்பாக்கியால் சுட்டார். இதில் நிலைதடுமாறி கீழே விழந்த தபாஸ் காலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட மீண்டும் துப்பாக்கியை எடுக்க முயன்றார். ஆனால், அதற்குள் காவல் துறையினர் அவரை செயல்பட விடாமல் தடுத்து, அவரை கைது செய்தனர்.
படுகாயமுடன் மீட்கப்பட்ட தபாஸ் எம்.வி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, ஐந்து தோட்டாக்கள், பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பேரைக் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தபாஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
முன்னதாக பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் ஆகிய 2 பேர் பிரகலாதபூர் என்ற பகுதியில் நடைபெற்ற என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: முதலாளியால் கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளான பெண்