ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவருக்கு, அன்மையில் சாலை விபத்து ஏற்பட்டது. இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூளையில் ரத்தம் உறைந்ததையடுத்து, அவரது மூளை செயலிழந்ததாக மருத்துவர்கள் அறிவிக்க, உடனடியாக சிறுவனின் உடல் உறுப்புக்களைத் தானம் செய்ய அவரது பெற்றோர்கள் முன்வந்தனர்.
இதனிடையே உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த 45 வயது நபர் ஒருவர், இதயக் கோளாறு காரணமாக தெற்கு டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இச்சிறுவனின் இதயத்தை பொருத்த முடிவுசெய்து விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் சிறுவனின் இதயம் எடுத்துக்கொண்டு, விமானம் மூலம் டெல்லி புறப்பட்டனர். கடந்த புதன்கிழமை இரவு 7.50 மணிக்கு டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் மூன்றில் விமானம் தரையிறங்கியது. தீபாவளி பண்டிகையால் போக்குவரத்தில் மாட்டிக்கொள்ளாமல் ஆம்புலன்ஸ் எளிதாகச் செல்ல கிரீன்காரிடர் முறையில் டெல்லியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதன்படி டெல்லி விமான நிலையத்திலிருந்து, ஆம்புலன்ஸ் மூலம் மேக்ஸ் மருத்துவமனைக்கு 17 நிமிடங்களில் 18.3 கி.மீட்டர் முக்கிய போக்குவரத்து ஜங்க்ஷன்களை கடந்து உரிய நேரத்தில் இதயத்தை மருத்துவமனைக்கு கொண்டுசேர்த்தனர்.
கிரீன்காரிடர் முறை என்பது, தானமாக பெறப்படும் உடல் உறுப்புக்களை நோயாளிகளுக்கு விரைவாகக் கொண்டு சென்று சேர்ப்பதற்காக, சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படுவது வழக்கம். இதுபோன்று ஆம்புலன்ஸில் செல்வதற்காகப் பிரத்யேக சாலை வசதி ஏற்படுத்தப்படும். இதற்கு காவல்துறையும் பாதுகாப்பாக வருவார்கள்.