டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் உடல்நிலை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக டெல்லியின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேசிய தலைநகர் பகுதிக்கு உட்பட்ட அலிபூர் என்ற பகுதியில் நேற்று (அக்.23) காற்று தர மதிப்பீடு 432 இருந்துள்ளது. அதேபோல முண்ட்கா பகுதியில் காற்று தர மதிப்பீடு 427ஆகவும் வஜீர்பூரில் 409ஆகவும் இருந்தது.
காற்றின் தரம் 0 முதல் 50க்குள் இருந்தால் காற்றின் தரம் 'நன்றாக' உள்ளது என்று பொருள், அதேபோல காற்றின் தரம் 51 முதல் 100வரை இருந்தால் 'திருப்தி' என்றும் 101 முதல் 200 வரை இருந்தால் 'மிதமானது' என்றும் அர்த்தம்.
அதேநேரம் காற்றின் தரம் 201 முதல் 300 இருந்தால் 'மோசம்' என்றும் 301 முதல் 400 வரை இருந்தால் 'மிகவும் மோசம்' என்றும் பொருளாகும். 401 முதல் 500 வரை காற்றின் தரம் இருந்தால் அது மிக மிக மோசமான நிலையாக கருதப்படுகிறது.
காற்றின் மாசு அதிகரித்துள்ளதால், டெல்லியில் பொதுமக்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இதனால் குழந்தைகளுக்கும் தொண்டை பகுதிகளில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள், நகராட்சி அமைப்புகள், போக்குவரத்து காவல் துறையினர், போக்குவரத்து கழகங்கள் ஆகியவை டெல்லியில் காற்று மாசு ஏற்படுவதைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) டெல்லி உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா பரவல்: அடுத்த 3 மாதங்கள் மிக முக்கியமானது - ஹர்ஷ் வர்தன்