உலகையே மிரட்டிவரும் கோவிட்-19 (கொரோனா) வைரஸ் என்ற தொற்றுநோய் தற்போது இந்தியாவிலும் வேகமாகப் பரவிவருகிறது. தற்போதைய நிலவரப்படி 44 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்தச் சூழலில், கோவிட்-19 பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயற்சித்து வருகிறது.
அந்த வகையில், டெல்லி மெட்ரோ நிறுவனம் அதன் ரயில்களை தூய்மைப் படுத்தும் பணியில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், "கொரோனா வைரஸ் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, ரயில்களைத் தூய்மைப்படுத்தும் பணித் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் (கெஜ்ரிவால்) வழிகாட்டுதலின் பேரில் ரயில்களில் உள்ள கைப்பிடிகள், கதவுகள், இருக்கைகள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்து வருகிறோம்.
இதுதவிர, மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள மின் தூக்கி, நகரும் படிக்கட்டுகள், படிக்கட்டுகளில் உள்ள கைப்பிடிகள் உள்ளிட்டவைகளையும் சுத்தம் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு (2019) டிசம்பர் மாதம் தோன்றியதாகக் கூறப்படும், கோவிட்-19 வைரஸ், அந்நாடு மட்டுமின்றி தென் கொரியா, ஜப்பான், ஈரான், இத்தாலி, இந்தியா, அமெரிக்கா என உலகம் முழுதும் வேகமாகப் பரவி வருகிறது.
இந்த வைரஸ் காரணமாக இதுவரை மூன்று ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை யாரும் இந்நோய்க்கு உயிரிழக்கவில்லை.
இதையம் படிங்க : விமான நிலையங்களை தாக்கும் கொரோனா: 300 கோடி அமெரிக்க டாலர் வருவாய் இழப்பு