நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் ஒரு விசித்திரமான சோகச் சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.
டெல்லி அருகே நொய்டா பகுதியில் வசிக்கும் சாரத் ரவுத்-நிர்மலா ரவுத் தம்பதியின் மகள் சமிஷ்தா ரவுத். இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இம்மாணவி, தேர்வு முடிவுகள் வருவதற்கு இரு நாட்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாகத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஆங்கிலத்தேர்வு சரியாக எழுதவில்லை என்ற விரக்தியிலிருந்த சமிஷ்தா தோல்வி பயம் காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் எனப் பின்னர் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. அதிர்ச்சியளிக்கும் விதமாக ஆங்கில பாடத்தில் 82 விழுக்காடு மதிப்பெண் பெற்று சிறப்பான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார் சமிஷ்தா. ஒட்டுமொத்தமாக 70 சதவிகிதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்று பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற சமிஷ்தா, அவரசப்பட்டு இந்த தவறான முடிவை எடுத்துள்ளதாக வேதனையில் புழுங்குகின்றனர் இவரது பெற்றோர்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் சோகத்துடன் பேசுகையில், ஆங்கிலத் தேர்வு முடிந்துவந்த பின் சமிஷ்தா இம்முறை கேள்விகள் கடினமாக வந்ததாக அவர்களிடம் கூறியுள்ளார். இதன் காரணமாக சில கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியவில்லை என்று புலம்பினார். ஆனால் நன்றாகப் படிக்கும் தனது மகள் இதுபோன்று விபரீத முடிவை எடுப்பார் என நினைத்துக் கூட பார்க்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும், மிகவும் அமைதியான பெண்ணான சமிஷ்தாவை ஒரு சுதந்திரமான பெண்ணாகவே வளர்த்தோம் என வருத்தத்துடன் கூறியுள்ளனர் அவரது பெற்றோர்.
அரிதினும் அரிதான இந்த இன்னுயிரை அவசரப்பட்டு யாராவது தூக்கியெறிவார்களா? 'இப்படி ஒரு முட்டாள்தனமான காரியத்தை நீ செய்யலாமா பெண்ணே?' என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழத்தானே செய்யும்.