தெற்கு டெல்லியின் ராதா சோமி சத்சங் பியாஸில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் மருத்துவமனையை கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை.5) டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் திறந்து வைத்தார்.
கரோனா வைரஸிற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனைதான், கரோனாவிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மருத்துவமனையாகும். இங்கு 10 ஆயிரம் படுக்கைகளுடன் 19 பராமரிப்பு மையம் உள்ளது.
இந்த மருத்துவமனை டெல்லி அரசால் 10 நாட்களில் உள்துறை அமைச்சகத்தின் உதவியுடன் அவசர அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இதில் கரோனா அறிகுறி உள்ளவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பராமரிக்கப்படுவர்.
இதில் நோயாளிக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டாலோ, மூன்றாம் நிலை மருத்துவமனை பராமரிப்பு தேவைப்பட்டாலோ 10 சதவீத படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் வசதி செயல்படுத்தப்படும்.
செயல்பாட்டு ரீதியாக, இந்த மையம் தீன் தயால் உபாத்யாய் மருத்துவமனை, மதன் மோகன் மால்வியா மருத்துவமனை ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. படுக்கைகள், மெத்தை, கைத்தறி போன்றவை அரசு சாரா நிறுவனங்கள் நன்கொடை அளித்துள்ளன.
இங்கு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நாளைக்கு ஐந்து ஆரோக்கியமான உணவுகள் வழங்கப்படும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சியாவன்ப்ராஷ், பழச்சாறுகள் ஆகியவை வழங்கப்படும். தற்போது சுமார் 200 பேர் இந்த மருத்துவமனையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...என்-95 மாஸ்க் போல பாதுகாப்பளிக்கும் சில்வர் மாஸ்க்: பரபரப்பைக் கிளப்பிய நகைக்கடை உரிமையாளர்!