சென்னையை அடுத்த திருவேற்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் எவ்வளவு பிரசித்திபெற்றதோ அந்தளவுக்கு டெல்லி வாழ் தமிழர்கள் மத்தியில் டெல்லி தவுலா கான் சான் மார்டின் மார்கில் உள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலும் பிரபலம்.
இந்தக் கோயிலில் சிவன் – அம்பாள் திருக்கல்யான வைபோகம் மாசித்திருவிழா ஞாயிறு, திங்கள் கிழமை நடந்தது. இதில், டெல்லி முழுவதும் பரவி வாழும் தமிழர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபாடு செய்தனர். தமிழ்நாட்டை போலவே மேள தாளம், நாதஸ்வரம் என மங்கள வாத்தியங்கள் முழங்க இந்தத் திருவிழா நடந்தது.
வட இந்தியாவின் போகி பண்டிகைக்கும் முதல் நாள் நடந்த இந்தத் திருவிழாவில், தமிழர்கள் மட்டுமன்றி வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தமிழர்கள் தங்களது பாரம்பரியான உடையான வேஷ்டி, சேலை, தாவனி, பட்டுப்பாவடை சகிதம் கோயிலுக்கு வருகை தந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இது தொடர்பாக தமிழர் ஒருவர் கூறுகையில், "டெல்லியில் வசந்த் விஹார், முனிர்கா, தவுலா கானில் கருமாரியம்மன் கோயில் தமிழர்களால் உருவாக்கப்பட்டு வழிபாட்டுத்தலமாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக தவுலா கான் கருமாரியம்மன் கோயில் திருவிழா, திருக்கல்யாண வைபோகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இந்தத் திருவிழா ஏதோ தமிழ்நாட்டிலேயே இருப்பதை போன்ற உணர்வை எங்களுக்கு ஏற்படுத்துகிறது. திருவிழா மட்டுமன்றி, மற்ற வெள்ளி, செவ்வாய் தினங்களிலும், இக்கோயிலில் பெரிய அளவில் கூட்டம் கூடுவது வழக்கம்," என்றார்.
இதையும் படிங்க:வாழை சாகுபடியில் வழுக்கி விழுந்த விவசாயிகள்