டெல்லி: பத்திரிகையாளர் பிரியா ரமணி, முன்னாள் மத்திய அமைச்சர் எம்ஜே அக்பர் மீது பாலியல் புகார் ஒன்றை #MeToo (மீ டூ) இயக்கத்தின் 2018ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி புகார் தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையாக வெடிக்க, எம்ஜே அக்பர் தனது அமைச்சர் பதவியை அடுத்த இரு தினங்களுக்குள் இழந்தார்.
இந்நிலையில் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்ஜே அக்பர் அவதூறு வழக்கு ஒன்றை டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கு டெல்லி பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் பிப்ரவரி முதல் வாரத்தில் முடிவடைந்தன. இதனால் விரைவில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் வழக்கின் தீர்ப்பை வருகிற 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
பத்திரிகையாளர் பிரியா ரமணி, பல ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜே அக்பர் தன்னிடம் அத்துமீறினார் என்று புகாரில் தெரிவித்துள்ளார். பிரியா ரமணியின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ள எம்ஜே அக்பர், இது தனக்கு எதிரான சதி என்று பதிலுரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #MeToo: 'ரமணியை ஹோட்டலில் சந்திக்கவில்லை'- எம்ஜே அக்பர்