டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை சந்தித்தார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் அமோக வெற்றிக்குப் பின் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற அவர், தேர்தலுக்குப்பின் முதன் முறையாக மோடியை இன்று சந்தித்தார்.
கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில் 47க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த கலவரத்தை காவல்துறை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவிவருகிறது. டெல்லி காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவிவிலகவேண்டும் என எதிர்கட்சிகள் சார்பில் அழுத்தம் தரப்படுகிறது. இதன் பின்னணியில் பிரதமர் மோடியை கெஜ்ரிவால் சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், டெல்லி கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரைந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கை குறித்து விவாதித்தாகவும், மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து பேசியதாகவும் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண உதவிகள், மாநில சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜல் நேற்று பிரதமர் மோடியைச் சந்தித்து டெல்லி சட்டம் ஒழுங்கு குறித்து விளக்கமளித்தாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: இந்திய உற்பத்தித் துறை தொடர்ந்து உயர்வு!