இந்தியாவில் பாஜகவைச் சேர்ந்த தலைவர்களின் வெறுப்புவாத பேச்சுக்கு எதிராக நடவடிக்களை எடுக்க ஃபேஸ்புக் நிர்வாகம் மறுப்பதாக அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டிருந்தது. இந்திய அரசியலில் இது பெரும் விவாதப் பொருளாக மாறியது. அதைத்தொடர்ந்து, ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்திய பிரிவு நிர்வாகிகள் இது தொடர்பாக செப்டம்பர் 2ஆம் தேதி நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு தங்கள் வாக்குமூலத்தை அளித்தனர்.
இதேபோல், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றபோது டெல்லியில் வன்முறை வெடித்தது. அச்சமயத்தில் வன்முறையை தூண்டும் வெறுப்புவாத பேச்சுகளை தனது தளத்தில் இருந்து ஃபேஸ்புக் நீக்க தவறியதே இந்த வன்முறைக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது.
இது தொடர்பாக ஃபேஸ்புக் இந்திய பிரிவின் தலைவர் அஜித் மோகன் டெல்லி சட்டப்பேரவையின் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான குழுவிடம் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு முன்னர் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும், ஃபேஸ்புக் தரப்பிலிருந்து டெல்லி சட்டப்பேரவை குழு முன்பு யாரும் ஆஜராகவில்லை.
இக்ககுழுவின் நோட்டீஸுக்கு பதிலளித்த ஃபேஸ்புக் நிறுவனத்தின் வழக்கறிஞர், இந்த விவகாரம் நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு விசாரணையில் உள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த டெல்லி சட்டப்பேரவை குழு, டெல்லி கலவரத்தில் தனது பங்கை மறைக்க ஃபேஸ்புக் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லி சட்டப்பேரவையின் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான குழுவின் தலைவரும் ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினருமான ராகவ் சாதா, "டெல்லி சட்டப்பேரவை குழு முன்பு ஃபேஸ்புக் நிர்வாகிகள் ஆஜராகாதது சட்டப்பேரவையை அவமதிப்பது மட்டுமல்ல, டெல்லியின் இரண்டு கோடி மக்களையும் அவமதிக்கும் செயலாகும்.
ஃபேஸ்புக் இந்திய பிரிவின் நிர்வாக இயக்குநர் டெல்லி சட்டப்பேரவை குழு முன்பு ஆஜராக கடைசி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இம்முறையும் ஆஜராகவில்லை என்றால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க விசாரணைக்குழு தயங்காது" என்று எச்சரித்தார்.
இதையும் படிங்க: எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கத் தயார் - ராஜ்நாத் சிங்