70 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட டெல்லிக்கு ஒரே கட்டமாக நாளை (பிப். 8) வாக்குப்பதிவு நடக்கிறது. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. பாஜகவை பொறுத்தமட்டில் கடந்த 2013 மற்றும் 2015 ஆகிய இரு தேர்தல்களிலும் ஆம் ஆத்மியிடம் தோல்வியை தழுவியுள்ளது. 2015ஆம் ஆண்டு தேர்தலில் ஆம் ஆத்மிக்கு 67 தொகுதிகள் கிடைத்தது. பாஜக மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றிப் பெற்றிருந்தது.
இந்த நிலையில் 2020ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. கட்சி சார்பில் பூத் ஏஜெண்டுகள் கலந்துகொள்ளும் மாதிரி வாக்குப்பதிவு பணிகள் காலை 6.30 மணிக்கு நடக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவுபெறும். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் 11ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன.
டெல்லி சட்டப்பேரவை காலம் வருகிற 22ஆம் தேதியோடு முடிவடைகிறது. அதற்கு முன்னர் புதிய அரசு பதவியேற்க வேண்டும். டெல்லியில் ஒரு கோடியே 46 லட்சத்து 92 ஆயிரத்து 136 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 80 லட்சத்து 55 ஆயிரம் வாக்காளர்கள் ஆண்கள், 66 லட்சத்து 35 ஆயிரம் பேர் பெண் வாக்காளர்கள் ஆவர்.
மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 58 தொகுதிகள் பொதுத்தொகுதிகள் ஆகும். மீதமுள்ள 12 தொகுதிகள் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பழங்குடியினருக்கு ஒரு தொகுதிகூட ஒதுக்கப்படவில்லை.
வாக்குப்பதிவை முன்னிட்டு டெல்லியின் முக்கியப் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 90 ஆயிரம் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 13 ஆயிரத்து 750 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் திடீர் திருப்பமாக பாஜக கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் கடைசி நேரத்தில் போட்டியிட மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : டெல்லியில் இரு சித்தாந்தங்களுக்கு இடையே தேர்தல்: அமித் ஷா பரப்புரை