சில மாதங்களுக்கு முன் மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான திக்விஜய் சிங், பாஜகவும் பஜ்ரங் தள் அமைப்பும், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிடம் பணம் பெற்று உளவாளிகளாக செயல்படுகிறார்கள் எனக் கூறினார்.
திக்விஜய் சிங்கின் இந்தக் கருத்துக்கு பல இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இதனையடுத்து பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞரான ராஜேஷ் குமார், டெல்லி உயர் நீதிமன்றத்தில் திக்விஜய் சிங் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். தற்போது அவர் மீதான அவதூறு வழக்கை ராஜேஷ் குமார் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்த அஸ்வினி குமார் என்பவரும் திக்விஜய் சிங் மீது அவதூறு வழக்குத் தொடுத்திருந்தார். அவர் அளித்த மனுவில்,” திக் விஜய் சிங்கின் கருத்து மிகவும் காயப்படுத்தியது. தேசியக் கட்சியின் மிக முக்கியத் தலைவராக இருக்கும் அவரின் இந்தக் கருத்து சமூகத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் பாஜக மீதான மக்களின் நம்பிக்கையை இழக்க வைக்கும் நோக்கத்தோடு அவர் கருத்து இருந்தது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணை வரும் நவம்பர் 13ஆம் தேதி நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.