ஆண்டுதோறும் ஜூலை மாதம், ஜார்க்கண்டின் தியோகர் பகுதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பது வழக்கம். இதைப் பயன்படுத்தி, இங்கு வரும் பக்தர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டினால் வரும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தார் இங்குள்ள பூசாரி மகேஷ் பண்டிட்.
பாலித்தீன் பயன்பாட்டை 2017ஆம் ஆண்டே ஜார்க்கண்ட் அரசு தடை செய்தபோதும், மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தி வருகின்றனர். பிளாஸ்டிக் மாசிலிருந்து இந்நகரைக் காப்பாற்ற, இந்த பூசாரி தன்னால் இயன்ற ஒரு முயற்சியை முன்னெடுத்துள்ளார்.
பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகத்தை, தனது இருசக்கர வாகனத்தில் ஒட்டி, அதை பொது மக்கள் கூடியிருக்கும் இடங்களில் ஓட்டி சென்று, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் மகேஷ் பண்டிட்.
இந்த விழிப்புணர்வு பரப்புரையை இவர் மூன்று ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். இவரது நல்ல நோக்கத்தைப் புரிந்துகொண்ட அப்பகுதிவாசிகள், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை பெருமளவு குறைத்துக் கொண்டனர்.
மகேஷின், இந்தத் தொடர் பரப்புரையைக் கண்ட மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்கள், இவரைப் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான விளம்பரத் தூதராக அறிவிப்பது குறித்தும் சிந்தித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பிளாஸ்டிக்கை செங்கற்களாக உருமாற்றும் ஹிமாச்சல் மக்கள்!