மகாராஷ்டிர மாநிலம் முழுக்க கடந்த சில நாள்களாகவே கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், தனே அருகேவுள்ள பிவாண்டி பகுதியில் இருக்கும் 43 ஆண்டுகால பழமையான ஜிலானி என்ற மூன்று மாடி அடுக்குமாடி குடியிருப்பு கனமழை காரணமாக இடிந்து விழுந்தது.
திங்கள்கிழமை(செப் 21) நடைபெற்ற இந்த விபத்தின் மீட்புப் பணிகளை தேசியப் பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர் மேற்கொண்டுவருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக இரண்டு நகராட்சி ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 39ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 11 பேர் குழந்தைகள் என்றும் இருவர் 15 வயதுக்கு குறைவானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 30க்கும் மேற்பட்டவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
40 குடியிருப்புகளை கொண்டிருந்த இந்த மூன்று மாடிக் கட்டடத்தில் 150க்கும் மேற்பட்டவர்கள் வசித்துவந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தினசரி கூலி வேலைக்குச் செல்பவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: மும்பையை மிதக்கவைக்கும் கனமழை!