கரோனா நிலவரம் குறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று வெளியிட்ட காணொலியில், ”புதுச்சேரியில் இன்று புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் மொத்தமாக 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 67 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 88 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 82 வயது முதியவர், பல்வேறு நோய்கள் காரணமாக அரசுப் பொது மருத்துமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அங்கு அவர் நேற்று மாலை உயிரிழந்தார். இது புதுச்சேரியில் கரோனாவால் நிகழ்ந்த இரண்டாவது உயிரிழப்பாகும்.
ஏற்கனவே விழுப்புரத்தைச் சேர்ந்தவர் புதுச்சேரியில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். நாள்தோறும் புதுச்சேரியில் 10க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்படுவதால், ஜூலை மாதத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். எனவே, மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும்“ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்த வழக்கு!