சீனாவின் வூஹான் நகரில் தோன்றி உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. சீனாவில் இந்த வைரஸால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருவதால், நாளுக்கு நாள் உயிரிழப்பின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், ஹூபேயில் கொரோனா வைரஸ் நோயால் 96 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் 15,299 பேர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 346 ஆக உயர்ந்திருப்பதாக சீன அரசு தெரிவித்துள்ளது. 60,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இன்று ஒரே நாளில் மட்டும் 630 பேருக்கு நோய் பரவியிருப்பதாகச் சீன சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக வூஹான் நகரம் முற்றிலும் முடங்கியுள்ளது. அங்குள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவையும் மூடப்பட்டுள்ளன. அந்நாட்டின் விமானப் போக்குவரத்தைப் பல்வேறு நாடுகள் தற்காலிகமாக தடை விதித்துள்ளன. அந்நாட்டின், பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நோயைக் கட்டுப்படுத்த சீன அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இதையும் படிங்க: ரோபோக்களை பயன்படுத்தி மக்களை பாதுகாக்கும் சீன அரசு!