பிகாரைச் சேர்ந்த வெளிமாநிலத் தொழிலாளியான சஞ்சய் குமார் யாதவ், ஆந்திர மாநிலம், வாராங்கல் அருகேயுள்ள கோரிகுந்தாவில் உள்ள ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே ஆலையில் பணிபுரிந்து வரும் மக்சூத் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, மக்சூத் மனைவியின் சகோதரியான ரஃபிகாவுடன் சஞ்சய் குமார் யாதவுக்கு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி ரஃபிகா சஞ்சய் குமார் யாதவை வற்புறுத்தியுள்ளார். இதனிடையே, தன்னுடைய சொந்தக் கிராமத்திற்கு ரஃபிகாவை, யாதவ் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது,செல்லும் வழியில் ரயிலிலேயே ரஃபிகாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
பின்னர், ஆந்திர மாநிலம், நிடவோலுவில் அந்த உடலை சஞ்சய் குமார் யாதவ் புதைத்துள்ளார். வீட்டிற்குத் திரும்பிய யாதவிடம், மக்சூத்தின் குடும்பத்தினர் ரஃபிகா குறித்து கேட்டுள்ளனர். பிகாரில் உள்ள தனது குடும்பத்தாருடன் அவர் தங்கி உள்ளார் என யாதவ் பொய் கூறியுள்ளார். பல நாட்கள் ஆகியும் ரஃபிகா திரும்பாததால், மக்சூத்தியன் குடும்பத்தாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து காவல்துறையினருக்கு தெரிவிக்கப் போவதாக மக்சூத்திடம் தெரிவித்திருக்கின்றனர்.
இதனால் கோபமடைந்த யாதவ், மக்சூத் உள்பட அவரின் குடும்பத்தாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். மக்சூத்தின் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் சாப்பிடும் உணவில் யாதவ் மயக்க மருந்தினை கலந்துள்ளார். இதில் அந்த உணவினை உட்கொண்ட 9 பேரும் மயக்கம் அடைந்த பின்னர், அனைவரையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
இந்தக் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறை இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கின் விசாரணை வாராங்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், மக்சூத்தின் குடும்ப உறுப்பினர்கள் 6 பேரை கொலை செய்த காரணத்தால் யாதவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.