ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி நேற்று இரவு 9 மணியிலிருந்து காணவில்லை. பெற்றோர், உறவினர்கள் இரவு முழுவதும் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், இன்று காலை குமாண்டிலி கிராமத்திலுள்ள நெல் பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலத்தில் சிறுமி ஒருவரின் உடல் கிடப்பதாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் விரைந்துவந்த காவல் துறையினர் இறந்த சிறுமி காணாமல்போனவர் என்று உறுதி செய்தனர்.
இது குறித்து, காவல் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், இறந்த சிறுமியின் மூக்கிலிருந்து ரத்தம் வடிந்ததாகவும் அவரின் உடலின் பல்வேறு பகுதிகளில் காயமடைந்ததற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், சிறுமியின் உடல் அவரது வீட்டிலிருந்து 300 மீட்டர் தொலைவில் இருந்ததாகவும் அவர் கூறினார்.
வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு சிறுமி இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றபோது கடத்தப்பட்டதாக அவரது தாயார் குற்றஞ்சாட்டினார்.
தனது மகள் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பின் கயவர்களால் கொலை செய்யப்பட்டதாகவும் சிறுமியின் தாயார் வேதனை தோய்ந்த குரலில் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து அம்மாவட்ட காங்கிரஸ் தலைவர் முனா திரிபாதி கூறுகையில், குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
உடற்கூறாய்வு செய்வதற்காக சிறுமியின் உடலை காவல் துறையினர் எடுத்தபோது ஆத்திரமடைந்த கிராம மக்கள் எடுக்கவிடாமல் குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
விசாரணை மேற்கொண்டு உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறையினர் உறுதியளித்ததையடுத்து உடலை எடுக்க அனுமதித்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.